தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வெளிப்பட்ட ஷோபனா, தற்போது நடிப்பைவிட பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘துடரும்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஷோபனாவின் பரிணாமமான நடிப்புக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் வந்தன.
இந்நிலையில், ஒரு பேட்டியில் மனம் திறந்த ஷோபனா, “நான் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இதற்காக இரண்டு இயக்குநர்களிடம் பேசினேன். ஆனால் அவர்கள், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மறுத்துவிட்டனர். நான் அவர்களிடம், ‘மம்முட்டி ஏற்கப்படவில்லையா?’ என்று கேட்டேன்,” என தெரிவித்தார். மேலும், “இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான ஒன்று. தோற்றம், குரல், நடத்தை என அனைத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் அந்த முயற்சிக்கு நான் தயார்” என்றார்.
ஷோபனா குறிப்பிட்ட மம்முட்டி நடித்த திரைப்படம் ‘காதல் தி கோர்’. அந்தப் படத்தில் மம்முட்டி ஓரினச்சேர்க்கையாளராக நடித்து, ரசிகர்களிடையே ஒரு வித்தியாசமான இடத்தைப் பிடித்தார். அப்படியொரு சாதனையை தானும் செய்து பார்ப்பதற்காக, ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஷோபனா கூறியுள்ளார். அவரது இந்த உணர்வுப்பூர்வமான கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
