அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விஷயங்கள்  பற்றி கருத்து வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

“மோடி பிரதமராக வேண்டுமெனும் நோக்கத்துடன்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணையப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் தனித்தனியாக பார்க்கப்பட வேண்டியவையாகும். அதனால், தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளோம். தேவை ஏற்பட்டால் மட்டுமே டெல்லியில் உள்ள தலைவர்களைச் சந்திப்பேன்; விளம்பரத்திற்காக பூங்கொத்து கொடுக்க மாட்டேன்,” என்றார்.

“ஏப்ரல் மாதம், சென்னையில் பேசிய அமித்ஷாவிடம் – ‘ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைப்பீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இது உட்கட்சி விவகாரம்’ என பதிலளித்தார். அது நல்ல பதிலாக இருந்தது. அவர் கூறும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றார். அவர் என் அண்ணன்தான் – பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும்.”

நான் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், இணைந்து பயணிப்போம் என இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். ஜெயலலிதா அம்மா தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும் எனக் கூறி, அமித்ஷா பல முயற்சிகள் செய்தார். ஆனால், அது அவர்களுக்கு சாதகமாகவும், எங்களுக்கு பாதகமாகவும் அமைந்தது. நான் யாரை எதிர்த்து, எதனை எதிர்த்து கட்சி தொடங்கினேன் என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் எதிரான முடிவை, எங்கள் தொண்டர்களோ நிர்வாகிகளோ ஏற்க மாட்டார்கள்

“நாங்கள் இணையும் புதிய கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க-வுடனோ, சீமானுடனோ எந்த கூட்டணியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கக்கூடும். புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் என்ன? அவர் தலைமை தாங்கக்கூடாதா? விஜய்யை குறைத்து பேசக்கூடாது,” என அவர் கூறினார்.

மேலும் டிடிவி தினகரனின் இந்த கருத்துகள், தமிழக அரசியல் சூழலைக் கிளர்ச்சி செய்யும் வகையில் உள்ளன என்றும், அவர் தனது எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய சிகரங்களை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.