அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் அந்த பணிகளை நாங்களே செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதாகவும் பிரிந்து சென்ற சக்திகள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற முடியும் எனவும் வலியுறுத்திய அவர் கண்டிப்பாக பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் எம்ஜிஆர் ஜெயலலிதா கூட பிரிந்தவர்களை வீட்டிற்கு சென்று நேரடியாக அழைப்பதாகவும் விமர்சிப்பவர்களையும் அரவணைத்து சென்றதாகவும் கூறினார்.
அவரது இந்த கருத்திற்கு தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நினைக்கும் செங்கோட்டையனுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதிமுக தொண்டர்கள் பிரிந்துள்ளதால் கடைசியாக எந்த தேர்தல்களிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் என் மனதின் குரலாக செங்கோட்டையன் ஒலித்துள்ளார் எனவும் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும் எனவும் கூறினார்.
