குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம், திசா தாலுகாவில் உள்ள மகாதேவியா கிராமத்தில் உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ரைமல்சிங் பர்மாரின் பண்ணை வீட்டில் உள்ள அடித்தளத்தில் கள்ள நோட்டு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையில் 39 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 பிரிண்டர்கள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தொழிற்சாலையை நடத்தியதாக சஞ்சய் சோனி மற்றும் கவுஷிக் ஷ்ரீமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ரைமல்சிங் பர்மார் தப்பியோடியதால், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவர்கள் எப்போது முதல் இந்த கள்ள நோட்டு தொழிற்சாலையை நடத்தினர், பொருட்களை எங்கிருந்து பெற்றனர், கள்ள நோட்டுகளை யாருக்கு விநியோகித்தனர், என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் பனாஸ்காந்தா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
