பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்தியா கூட்டணியை கண்டித்து, செப்டம்பர் 4ம் தேதி பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஜெகானாபாத் பகுதியில் பாஜகவினர் பெருந்திரளாகச் சேர்ந்து பேரணியில் ஈடுபட்டனர்.

 

இந்த  சம்பவத்தின் போது பள்ளிக்கு செல்வதற்காக வந்த ஒரு ஆசிரியை, தாமதமாகிவிட்டதாகக் கூறி பாஜகவினரை நாடி வாதிட்டார். ஆனால், “முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது; நீங்கள் எப்படி செல்லலாம்?” என்று கூறிய பா.ஜ.க. மகளிரணி உறுப்பினர்கள், அந்த ஆசிரியை செல்லமுடியாதவாறு தடுத்தனர்.

இதுகுறித்த வாக்குவாதம் மற்றும் தடுக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. பின்னர், அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, ஆசிரியைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.