சென்னை ஐயனாபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறு, கொலையுடன் முடிவடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உடன் பிறந்த தம்பியான சிவா என்பவருடன் நேற்று இரவு சில சொத்துத் தகராறு மற்றும் குடும்ப விவகாரங்களை தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சிவா கோபத்தில் , அண்ணண் என்றும் பாராமல் பாபுவை கொலை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. கொலை செய்த பிறகு, பாபுவின் உடலை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு சிவா தப்பிச் சென்றார். தகவல் அறிந்த ஐயனாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை திறந்து பாபுவின் உடலை கைப்பற்றி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, தப்பிச் சென்ற சிவாவை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்திலேயே அண்ணன்-தம்பி இடையே ஏற்பட்ட தகராறு உயிரிழப்பிற்கு காரணமாக உருவானது, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
