உத்தரப்பிரதேசம் மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள குக்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், புதிதாகப் பிறந்த பெண் குழந்தை, பைக்குந்தி ஆற்றின் கரையில் உள்ள காளி கோயில் அருகே, புறவெளிப் புதர்களில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம், சமூகத்தை உலுக்கியதோடு, குழந்தையை முதலில் கண்டுபிடித்த காய்கறி விற்பனையாளர் ஹரிஷ்சந்திராவின் மனிதாபிமான செயல்கள் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளன. மஹாராஜ்கஞ்ச் நகரைச் சேர்ந்த  ஹரிஷ்சந்திரா, அப்பகுதியில் வியாபாரம் செய்தபோது , புதர்களிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கவனித்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது, புதிதாக பிறந்த பெண் குழந்தை சோர்ந்த நிலையில் கிடந்ததை பார்த்து, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

தனது வீட்டில், குளிரிலிருந்து குழந்தையை பாதுகாக்க, சூடான ஆடைகளை அணிவித்து, வெதுவெதுப்பான தண்ணீர் கொடுத்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்த உடனே, குக்லி டவுன் அவுட்போஸ்ட் பொறுப்பாளர் அசோக் கிரி தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. குழந்தையை வெகு விரைவாக குக்லி சமூக சுகாதார மையத்தில் அனுமதித்து, அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதன்மை பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். குழந்தைக்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை முழுமையாக சீராக இருப்பதை உறுதிப்படுத்திய பின், சைல்டுலைன் அமைப்பின் பராமரிப்பிற்கு குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களிடையே வேதனை மற்றும் கோபத்தை கிளப்பியுள்ளது. “புதிய பிறந்த குழந்தையை இவ்வாறு கைவிடுவது மிகுந்தகண்டனத்திற்குறிய செயல்,” என பலர் கண்டனங்களை தெரிவித்தனர். சிலர், சமூக அழுத்தங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகள் இதற்குப் பின்னிலிருக்கும் என சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், ஹரிஷ்சந்திராவின் தைரியமான மற்றும் மனிதநேயமான நடவடிக்கைகள், குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது என்பதில் ஐயமில்லை. அவருக்கு சமூக வலைதளங்களிலும், ஊரிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன. இதுகுறித்து போலீசார் முழுமையான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், குழந்தையை கைவிட்டவர் யார்? ஏன்? என்பதற்கான பதில்களை கண்டறிய, காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.