மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த மணவாளனின் மகன் சரத்குமார் (32) குவைத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
இருவரும் ஒரே வகுப்பு நண்பர்களாக இருந்ததால் பெற்றோரின் எதிர்ப்பு எதுவும் இல்லை. சரத்குமார் அவ்வப்போது குவைத்தில் இருந்து பணம் அனுப்பி, அந்த இளம்பெண்ணுக்கு 15 பவுன் நகை மற்றும் சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் காணாமல் போனதால், அவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு எஸ்ஐயுடன் பழக்கம் ஏற்பட்டதோடு, பின்னர் நெருக்கமும் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு, அந்த இளம்பெண்ணும் எஸ்ஐயும் சேர்ந்து குவைத்தில் இருந்த சரத்குமாருக்கு வீடியோ கால் செய்து, “நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம், நீ எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், எஸ்ஐ சரத்குமாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சரத்குமார், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசும்போது, காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், எஸ்ஐ மிரட்டியதாகவும், உயிருடன் இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர், குவைத்தில் உள்ள நண்பர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த செய்தி அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை எஸ்பி அலுவலகம் சென்று, மகனை மிரட்டிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சரத்குமாரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
