தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் அமைந்துள்ள காசிமடம், சைவம், தமிழ், கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் பெரும் பங்களிப்பு ஆற்றி வரும் அருள் நிலையமாகும். இந்த மடத்தின் 21வது அதிபராக 1972ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆவார்.

1958இல் துறவறம் ஏற்று, சில காலம் இளவரசராகப் பணியாற்றிய அவர், சைவம் மற்றும் தமிழை இரு கண்களாகக் கொண்டு, திருமுறைகளை தினமும் பாராயணம் செய்து வந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காசிமடத்தை பொற்கால வளர்ச்சியடைச்செய்த அவர், பல இடங்களில் மடத்தின் பரப்பை விரிவாக்கம் செய்ய முக்கிய பங்கு வகித்தார்.

300 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்க காசிமடம், அவரின் தலைமையில் மக்கள் மதிப்பு பெற்ற அருள் நிலையமாக வளர்ந்தது. கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள், நேற்று  (ஆகஸ்ட் 19) இரவு 8 மணியளவில் திருப்பனந்தாள் மடத்தில் வயது மூப்பு காரணமாக மறைந்தார். 95 வயதில் அவர் அடைந்த முக்தி, சைவ சமுதாயத்திற்கும், தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் பேரிழப்பாகும் என மதகுருக்கள் மற்றும் பக்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.