மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது மகனை கிருஷ்ணர் வேடமணிந்து பைக்கில் நிற்க வைத்து, ஹெல்மெட் அணியாமல் வீடியோ எடுத்த இந்த தந்தையின் செயல், பலரது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தன்மய் ரஜாலே என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ 8.8 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. குழந்தையின் பாதுகாப்பை புறக்கணித்து, வெறும் சமூக வலைதள புகழுக்காக இப்படி ஆபத்தான செயலில் ஈடுபட்டது பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோவில், பைக் வேகமாக செல்லும்போது சிறுவன் கேமராவை பார்த்து புன்னகைக்கிறான்; ஒரு கட்டத்தில் தந்தையை கட்டிப்பிடிக்கும் அவனது அழகான வெளிப்பாடுகள் பார்வையாளர்களை கவர்ந்தாலும், இது மிகவும் ஆபத்தான செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஹெல்மெட் இல்லாமல், குழந்தையை பைக்கில் நிற்க வைத்து வீடியோ எடுத்தது, குழந்தையின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை உணராத பெற்றோரின் மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதள பயனர்கள் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இப்படி ஒரு ரீல் எடுக்கும் ஆசையில் குழந்தையின் பாதுகாப்பை பணயம் வைப்பது ஏற்புடையதல்ல என்பது பலரது ஒருமித்த கருத்தாக உள்ளது.