நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து, கடந்த 7 மாதங்களாக பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது, அங்கு வந்த துரைராஜ் மனைவியிடம் பேச முயன்றார். ஆனால், பேச்சு வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் தீவிரமடைந்ததால், தங்கலட்சுமி தனது தாய் பேச்சியம்மாளை செல்போனில் அழைத்து நடந்தவற்றை கூற, உடனே பேச்சியம்மாள் பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தார்.

மகள்-மருமகனுக்கு இடையேயான மோதலை தடுக்க முயன்ற அவர், துரைராஜின் கோபத்திற்கு ஆளானார். ஆத்திரத்தில் துரைராஜ், பேச்சியம்மாளின் கையை இழுத்து, அவரது விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதில் பேச்சியம்மாளின் விரல் கிழிந்து ரத்த வெள்ளத்தில் தொங்க, அவர் வலியால் அலறினார்.

பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.