குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு அல்லது உயிரியல் கர்ப்பத்தை மேற்கொள்ள விரும்பாத நபர்களுக்கு உதவக்கூடிய உலகின் முதல் “கர்ப்பகால ரோபோ”வை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு கர்ப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரு செயற்கை கருப்பையில் வளர்ந்து, குழாய் வழியாக தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முட்டை மற்றும் விந்தணு எவ்வாறு கருத்தரிக்கப்படும் என்பது குறித்து இன்னும் விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த ரோபோவை குவாங்சோவை தளமாகக் கொண்ட கைவா டெக்னாலஜி, சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிஃபெங் தலைமையில் உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் “முதிர்ச்சியடைந்த நிலையில்” இருப்பதாகவும், தற்போது ரோபோவின் வயிற்றில் செயற்கை கருப்பையை பொருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் இதன் முன்மாதிரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பிடப்பட்ட விலை சுமார் 100,000 யுவான் (“கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய்) ஆகும்.

இந்நிலையில், இந்த முயற்சி இனப்பெருக்க அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், உலகளவில் சுமார் 15 சதவீத தம்பதிகள் எதிர்கொள்ளும் கருவுறாமை சவால்களை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், கரு-தாய் பிணைப்பு, கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை எவ்வாறு ஆதாரமாகக் கொண்டு வருவது, குழந்தையின் உளவியல் வளர்ச்சிக்கு ஏற்படும் தாக்கம் போன்ற பல நெறிமுறை மற்றும் சட்டசார் கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கான தீர்வுகளை கண்டறிய குவாங்டாங் மாகாண அதிகாரிகளுடன் இணைந்து டாக்டர் ஜாங் தலைமையிலான குழு கொள்கை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
