மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை நடந்த பயங்கர பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலை எண் 19-ல் உள்ள நளா ஃபெர்ரி காட் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது அதிவேகமாக மோதியதால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 8 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், உள்ளூர் மக்களும், மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 35 பயணிகளையும், பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் மொத்தம் 45 பயணிகள், அதில் 6 குழந்தைகள் உட்பட பயணித்ததாகவும், இவர்கள் அனைவரும் கங்கை ஆற்றில் புனித நீராடிவிட்டு பிகாருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
விபத்துக்கு முதற்கட்ட காரணமாக, பேருந்து ஓட்டுநர் தூங்கியதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக காவல்துறை கருதுகிறது. இந்த மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால், பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து, பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தற்போது காவல்துறை வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் புர்பா பர்த்வான் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
