கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தின் தொட்டபள்ளாப்புரா பகுதியைச் சேர்ந்த 45 வயது பிரவீன், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். இவர் தொட்டபள்ளாப்புராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார்.

அப்போது அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த பழக்கம் படிப்படியாக காதலாக உருமாறியது. ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், பிரவீன் மாணவியுடன் காதல் உறவைத் தொடர்ந்தார். இது மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவர்கள் பிரவீனை கடுமையாக எச்சரித்து, மாணவிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடும் பணியைத் தொடங்கினர்.

அதனால் அவரசமாக மாணவிக்கு மற்றொரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால், இதை ஏற்க மனமில்லாத பிரவீன், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த மாணவியை கூட்டி கொண்டு ஓடியுள்ளார்.

மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, மாணவி பேராசிரியர் பிரவீனுடன் சென்றது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த பெற்றோர், தொட்டபள்ளாப்புரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். தீவிரமாக தேடி  மாணவியையும் பத்திரமாக மீட்டனர். தற்போது பிரவீனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒரு பேராசிரியர், மாணவியுடன் காதல் உறவு கொண்டு ஓட்டம் பிடித்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.