குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டம் தராட் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி ஹரேஷ் சவுதாரி என்றவர் போலீசில் புகார் அளித்தார்.

அதில், தன்னுடன் பழகிய 18 வயது மாணவி, அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் உறவினர்கள் 2 பேரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். மேலும் மாணவி எங்கு உள்ளார் என ஆட்கொணர்வு மனுவும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

போலீசார் மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தச் சென்றபோது அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. மாணவி கடந்த ஜூன் 24ஆம் தேதி இறந்துவிட்டதாகவும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் உடனடியாக இறுதிச் சடங்கு நடத்தி விட்டதாகவும் தெரியவந்தது. இதோடு, மாணவியின் தந்தை செண்டாபாய் தலைமறைவாகி விட்டதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், மாணவியின் மரணம் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிப்பட்டன.

மருத்துவர் ஆக கனவு கண்ட மாணவி, கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்த நிலையில், அவர் ஹரேஷ் சவுதாரி என்ற திருமணமான நபருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதன் பின்னர் குடும்பத்தின் எதிர்ப்பால் மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில், மாணவியிடம் ஹரேஷ் தனக்கு திருமணமான விவரத்தை கூறிவிட்டாரா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். மாணவி மற்றும் ஹரேஷ் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ஒன்றாக வாழ தீர்மானித்தது தெரியவந்தது. ராஜஸ்தானில் ஒரு ஓட்டலில் இருந்தபோது போலீசார் மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவி கண்டிக்கப்பட்டார்.

அதேசமயம், ஹரேஷ் வேறு ஒரு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜூன் 21ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த ஹரேஷ், மாணவியிடம் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதில் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் உறுதி செய்தனர். ஜூன் 24ஆம் தேதி தாண்டியா கிராமத்தில், மாணவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் தந்தை செண்டாபாய் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக வலை வீசி வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.