அமெரிக்காவில் 70 வயதான சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஹர்பால் சிங், நார்த் ஹாலிவுட் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கோல்ஃப் கிளப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4 அன்று நடந்த இந்த சம்பவத்தில், லாங்கர்ஷிம்  குருத்வாரா அருகே உள்ள 7-இலெவன் கடை அருகே, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அவர் கிடந்ததை போலீசார் மீட்டனர்.

அவரது தலையும், முகப்பகுதியும் கடுமையாக சேதமடைந்ததால், இதுவரை மூன்று பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிர் பிழைப்புக்காக போராடி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஹர்பால் சிங்கின் சகோதரர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “மூளையில் உள் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் பேச முடியவில்லை. தினமும் செய்வதைப்போல் அந்த நாளும் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார்.

ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. இனி எங்களுக்கு பாதுகாப்பு உணர்வு இல்லை” எனக் கூறினார். LAPD போலீசார், இது வெறுக்கத்தக்க குற்றம் (Hate Crime) அல்ல என்று தெரிவித்தாலும், சம்பவ நேரத்தில் அருகில் இருந்த ஒருவரின் வீடியோவும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்சில்மேன் அட்ரின் நசாரியன், மத நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். சமூகத் தலைவர்கள் அந்த பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியை அதிகரிக்கவும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேசமயம், ஹர்பால் சிங் குடும்பத்திற்கான மருத்துவச் செலவுகளை சமாளிக்க GoFundMe பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.