சிரியாவின் ஸ்வீடா தேசிய மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) வெளியிட்ட, தேதியிடப்படாத இந்த காணொளியில், ஜனாதிபதி அகமது அல்-ஷரா அரசாங்கத்திற்கு விசுவாசமான ஆயுதப்படையினர் மருத்துவ ஊழியர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, ஒருவரை முகத்தில் அறைந்த பின்னர் சுட்டுக் கொல்வது வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து பலர் தரையில் விழுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம், ஜூலை மாதம் தொடங்கிய ட்ரூஸ் போராளிகளுக்கும் சுன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான கடும் மோதல்களின் போது நடந்ததாக கூறப்படுகிறது. டமாஸ்கஸிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள ஸ்வீடா நகருக்குள் அரசுப் படைகள் நுழைந்து போர்நிறுத்தத்தை அமல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டாலும், இறுதியில் பெடோயின் பிரிவுகளுடன் இணைந்து ட்ரூஸ் போராளிகளுக்கு எதிராக செயல்பட்டதாக SOHR மற்றும் உள்ளூர் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

70,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஸ்வீடா, ட்ரூஸ் படைகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, ட்ரூஸ் சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி, சர்வதேச விசாரணையை கோரியும், பொறுப்பானவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சர்வதேச பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.