சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக செல்வாக்காளர் “டெயில் பிரதர்” வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. உறவினரின் குழந்தை, ரத்தின மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்ட விலையுயர்ந்த லாபுபு பொம்மையை கேட்டது. ஆனால் டெயில் பிரதர் மறுத்துவிட்டதால், கோபமடைந்த சிறுவன் அருகிலிருந்த ரிமோட் கண்ட்ரோலை வீசி, சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கண்ணாடி பேனல்கள், ரூ.36 லட்சம் மதிப்புள்ள இத்தாலிய படிக சரவிளக்கையும் உடைத்துவிட்டார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, சிறுவன் எந்தவித மன்னிப்பும் கேட்கவில்லை என டெயில் பிரதர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “மேற்பரப்பைப் பழுதுபார்க்கும் பணிக்கு, மீதமுள்ள அனைத்து கண்ணாடி பேனல்களையும் அகற்றி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். மொத்த சேதம் ரூ.48 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில், குடும்பம் வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது.

குழந்தையின் பெற்றோர், “நாங்கள் ஏழைகள், முழு இழப்பீடு தர முடியாது. நீதிமன்றத்திற்குச் செல்வதில் எந்த பயனும் இல்லை. குழந்தையை இதில் இழுக்க வேண்டாம்” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவை உணர்ச்சிவசப்பட்டு பயன்படுத்தி, உண்மையான இழப்பை விட குறைவான தொகையைத் தருவது எல்லை மீறிய செயல் என டெயில் பிரதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சின் சியூ டெய்லி வெளியிட்ட தகவலின்படி, டெயில் பிரதரின் லாபுபு பொம்மை சாதாரணமானது அல்ல. பொம்மையின் காதுகள், கைகள் மற்றும் கால்கள் அனைத்தும் பெரிய ரத்தின மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததால், அதன் மதிப்பைக் கணக்கிடவே கடினம். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, “விலையுயர்ந்த பொருட்களுடன் குழந்தைகள் வரும்போது ஏற்படும் அபாயம்” குறித்து நெட்டிசன்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர்.