பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சுமார் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவானி கிராமத்தைச் சேர்ந்த மங்கனு யாதவ், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதையடுத்து அவரது தந்தை ஷத்ருதன் யாதவ் மகனைத் தேடி பல்வேறு இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினார்.

மகனைத் தேடிச் சென்ற தந்தைக்கு சாலையோர புதர்கள் அருகே மங்கனுவின் காலணி கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடியபோது அவரது கைப்பேசியும் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் புதர்களுக்குள் சென்று பார்த்தபோது, ரத்தக் காயங்களுடன் மங்கனுவின் சடலம் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரது முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் பலமுறை தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான கிராம மக்கள் அங்கு திரண்டனர். இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த அவர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்ட நிலையில், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு மங்கனு ஒருவர் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் தனது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலையும் போலீஸார் விசாரணையின் ஒரு கோணமாக எடுத்துக்கொண்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் இளைஞரின் மரணத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.