ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒங்கோல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் சாவியை பேருந்தில் வைத்துவிட்டு ஓய்வறைக்கு சென்றனர். அப்போது பேருந்து நிலையத்தில் மது போதையில் வந்த முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்தார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை வேகமாக ஓட்டி சென்றார்.

முதியவர் பேருந்தை கடத்திச் செல்வது குறித்து பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் துறையினர் வேனில் பேருந்தை விரட்டிச் சென்றனர். முதியவர் பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்றார். பின்னர் ஒரு வழியாக அங்குள்ள மேம்பாலத்தில் பேருந்தை மடக்கி பிடித்தனர். அதன் பின் அந்த முதியவரை மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். டிரைவரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.