ரஷியாவிடம் இருந்து இந்திய எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து கச்சா எண்ணை பெற்று வருகின்றன. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அவரது அழுத்தத்துக்கு இந்திய மத்திய அரசு “நிறுத்தமாட்டோம்” என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி, தற்போது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதுதான் இந்தியாவுக்கு அதிக லாபமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எஸ்.பி.ஐ. வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.76,500 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த நிதியாண்டிலும் கச்சா எண்ணை பெறாமல் இருந்தால், அந்த இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்ததாவது: “ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை.

இதுகுறித்து மத்திய அரசு எங்களிடம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை” என அதிகாரிகள் கூறினர். இந்த நிலைமை, அமெரிக்க அழுத்தம் மற்றும் இந்தியாவின் பொருளாதார நலன் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.