திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, போலி வாக்காளர்களை சேர்த்து பாஜகவிற்கு துணை நிற்கும் அதிமுகவிற்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்று வெல்லும். பொய்களை கட்டவிழித்து ஆட்சியைப் பிடித்த பாஜக தங்களுடைய ஆட்சித் திறனால் மக்களை கவர முடியாமல் நாட்டை தொடர்ந்து ஆள எத்தனையா குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றது.
தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கிறது. கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களை இணைத்து அதன் மூலம் பாஜக தனது வெற்றியை சாத்தியப்படுத்தியதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த தேர்தல் மோசடி ஆதாரங்கள் தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கை பாதையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து. அடுத்த ஐந்து மாதங்களில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களை விட கூடுதலாக 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐந்தே மாதத்தில் 41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்? வானத்திலிருந்து குதித்தார்களா? அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்னும் பெயரால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பிற மாநில மக்களை தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தை பாஜக அரசு மேற்கொள்ள கூடும். இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்கும் செயல். இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மவுனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பாஜகவின் அடிமையாக மாறி அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்.
தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அவமானம் வைக்க துணிந்து விட்டாரா? இல்லை SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்? தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக போராடி வெற்றி பெற முடியாது அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களோடு தமிழ்நாடு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள் என கூறியுள்ளார்.
