வரும் 17-ஆம் தேதி (ஆகஸ்ட் 17) நெல்லையிலிருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க நயினார் நாகேந்திரன் தயாராகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய புகழ்பெற்ற ‘4777’ எண்ணை பிரத்யேகமாக கொண்ட வாகனத்தை வடிவமைத்து களம் இறங்கும் திட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எம்.ஜி.ஆர். தீவிர ரசிகரான நயினார், அதிமுகவின் மூலம் அரசியல் அடையாளம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் பயணத்தில் அனைத்து தொகுதிகளிலும் ‘MGR ஸ்டைலில்’ மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆரும் ஏழும்!

எம்.ஜி.ஆர். பொதுநிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது ‘ராமர் நிற’ அம்பாஸிடர் கார் மற்றும் ‘4777’ எண் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது; அந்தக் கார் தொலைவிலிருந்தே தெரிந்தாலே ரசிகர்களின் கொண்டாட்டம் எழுந்தது என்பதும் வரலாறு. பெரும்பாலும் தனியாக அல்லாது ஒருவரைத் துணையாகக் கொண்டு பயணிக்கும் தனிச்சிறப்பும் அவருக்கு உண்டு.

புலவர் புலமைப்பித்தன் கூறியதுப்படி, பிளைமவுத், ஜப்பான் தயாரிப்பான ‘ஹயாத்’ போன்ற பல கார்கள் இருந்தும், எம்.ஜி.ஆர். மிக விரும்பியது ‘4777’ அம்பாஸிடர் காரே. அந்த எண்ணில் உள்ள முதல் ‘M’ எழுத்து மெட்ராஸ் அல்ல, மகாராஷ்டிராவைக் குறிப்பதாகவும், அந்நாளில் முதல்வராக இருந்த சரத்பவார் எம்.ஜி.ஆருக்காக அந்த எண்ணை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. எண் ‘7’ மீது இருந்த அவரது நெகிழ்ச்சி காரணமாகவே 1917 (பிறப்பு), 1927 (நாடகம்), 1937 (சினிமா), 1947 (நாயகன்), 1957 (அரசியல்), 1967 (எம்.எல்.ஏ), 1977 (முதல்வர்) என ‘7’ ஓசையுடன் பயணம் தொடர, 1987 வரை முதலமைச்சராக பதவி வகித்ததும் நினைவுகூரப்படுகிறது.

‘4777’ எண்ணின் கூட்டுத் தொகையும் ‘7’ ஆகும் என்பதால், இப்போது நயினார் தேர்ந்தெடுத்த 4777 ஸ்டைல் வாகனமும் அந்தச் சின்னத்துடனான இணைப்பை அரசியல் அரங்கில் மீண்டும் பேசவைத்துள்ளது.