காசாவில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், மத்திய காசாவில், பசியுடன் உதவிக்காக காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்தின் மீது உதவி செய்ய வந்த லாரி மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது ஒரு சாதாரண விபத்து எனத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு பெரிய துயரம். அந்த லாரி, இஸ்ரேலிய ராணுவத்தால் முன்பு குண்டுவீசப்பட்ட பாதுகாப்பற்ற சாலையில் செல்லும் போது கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காசா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலிய இராணுவம், மனிதாபிமான உதவிகள் கொண்ட வாகனங்களை பாதுகாப்பான பாதைகளில் செல்ல அனுமதிக்கவில்லை. போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லாத பாதைகளில் லாரிகளை அனுப்புகிறது.

இதுவே இந்த விபத்துக்குக் காரணம்” எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பசிக்காக உதவி லாரிகளை சூழ்ந்து கொள்வதால் வாகன ஓட்டுநர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. பலர் லாரிகளை அடித்து உடைக்கும் அளவுக்கு பசியில் தவிக்கின்றனர், இது தேவையற்ற குழப்பத்தையும் மரணங்களையும் உருவாக்குகிறது என்றும் காசா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் 138 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களில் மேலும் 771 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கப்பட்ட மூன்று உடல்களும் அடங்கும். காசா முழுவதும் நிலவும் இந்த மனிதாபிமான சிக்கலை மீட்டெடுக்க உலக நாடுகள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.