ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகள் ஜூலை 28 அன்று நடைபெற்ற ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், டாச்சிகாம்-ஹர்வான் வனப்பகுதியில் பதுங்கியிருந்த இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்களில் ஒருவர் பைசல் ஜாட் எனப்படும் சுலைமான் ஷா, மற்றவர் அபு ஹம்சா எனப்படும் ஆப்கான் மற்றும் மூன்றாவது யாசிர் எனப்படும் ஜிப்ரான் ஆவார்.

இந்த மூவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. இவர்களிடமிருந்து பாகிஸ்தான் அரசு வழங்கிய பாஸ்போர்ட், NADRA (பாகிஸ்தான் தேசிய தரவுத்தளம்) மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் விவரங்கள், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டைகள், செயற்கைக்கோள் தொலைபேசிகளில் இருந்த GPS டேட்டா, சேதமடைந்த SD அட்டைகள் மற்றும் குடும்ப விவரங்கள் கொண்ட ஆவணங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இவர்களிடமிருந்து கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த சட்டைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும், இவர்கள் மீது சந்தேகங்களை உறுதியாக்குகின்றன.

இந்த மூவரும் மே 2022 இல் குரேஸ் துறை வழியாக இந்தியாவிற்குள் பதுங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு முந்தைய நாள், ஏப்ரல் 21 ஆம் தேதி பைசரனுக்கு அருகே உள்ள ஹில் பார்க் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு உணவளித்ததாக கூறப்படும் இரண்டு உள்ளூர்வாசிகள் பாதுகாப்பு படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவல்கள் அனைத்தும் பாகிஸ்தானின் நேரடி ஈடுபாட்டையும், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவையும் காட்டுகின்றன என பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. ‘ஆபரேஷன் மகாதேவ்’யின் வெற்றிகரமான நிறைவு, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.