கான்பூர் நகரின் பார்ரா-8 பகுதியில் வசிக்கும் ராகுல் என்ற இளைஞர், தனது பள்ளி செல்லும் 7 வயதுப் பெண் குழந்தை ஒரு பள்ளத்தில் விழுந்ததால் மிகுந்த வேதனையடைந்தார். தொடர்ந்து பலமுறை நகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பி மற்றும் கவுன்சிலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், அவர் ஒரு பாய், தலையணையுடன் தண்ணீர் தேங்கி நிறைந்த பள்ளத்துக்கு சென்று அங்கேயே படுத்து “பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன் மகளின் பாதுகாப்பை நினைத்துத் தான் இப்படி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தந்தை தெரிவித்தார். “சாலை முழுக்க குண்டும் பள்ளமும்தான். எங்கே சாலை ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்றே தெரியாத நிலை. இன்று என் குழந்தை விழுந்தாள், நாளை மற்றோர் குழந்தை விழுந்தால் யார் பொறுப்பு?” என்று கேள்வியெழுப்பினார்.

கடந்த ஆண்டு ஒரு முதியவர் இப்பாதையில் விழுந்து காயமடைந்த சம்பவத்தையும் மக்கள் நினைவு கூறினர். இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக சாலை சீரமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த பாதை ராம் கோபால் சவுக் மற்றும் ஆனந்த் தெற்கு நகரத்தை இணைக்கும் முக்கிய வழியாகும். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில் பயணிக்கின்றனர். மழைக்காலங்களில் சாலை முழுக்க சேறும் தண்ணீரும் கலந்தே செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த தந்தையின் செயல் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.