நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “நான் ஆட்சி அமைத்தால், ஆணவக்கொலை, சாதிக்கொலை உள்ளிட்ட கொடூரங்களைச் செய்தவர்களின் கல்விச் சான்றிதழ்கள் செல்லாது என உத்தரவிடுவேன்” என்றும், குற்றவாளிகள் அரசின் எந்தவொரு திட்டங்களிலும் இடம் பெற முடியாதவாறு செய்வேன் எனக் கூறினார்.

மேலும், “அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை கிடையாது என்பேன். இவர்களின் தலைமுறையினருக்கும் அரசு வேலை கிடையாது என சட்டம் இயற்றுவேன். இப்படிப் பட்ட சட்டங்களால் மட்டுமே ஆணவக்கொலை, ஆகியவை கட்டுப்படும்” எனவும் சீமான் வலியுறுத்தினார். தற்போது நெல்லை கவின் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், சீமான் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளன.