கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகளான அஞ்சனா (வயது 21), காராளிகோணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து கண்டக்டரான நிகாஸுடன் காதலில் ஈடுபட்டிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக நேசித்து வந்த நிலையில், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஞ்சனா வீட்டை விட்டு வெளியேறி நிகாஸை திருமணம் செய்து கொண்டு, அவருடன் வாழ ஆரம்பித்தார்.

இந்த காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் சென்றது. அப்போது, அஞ்சனா திருமண வயதை கடந்திருப்பதால், காதல் ஜோடி விருப்பப்படி வாழலாம் என ஐகோர்ட் அனுமதி அளித்தது. இந்த நிலையில்,  நிகாஸ் வீட்டில் இல்லாத போது, அஞ்சனா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் கடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஞ்சனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், கலக்கம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு பிறகு ஏதேனும் சந்தேகத்திற்குரிய காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அரசு உத்தரவுப்படி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.