புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள புறங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் பிரகாஷ் (17), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதேபோல், நெமெலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலின் மகளும் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இருவரும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திருவப்பாடி அருகேயுள்ள அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றபோது காதலித்து வந்தனர்.

இருவரது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவர, அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் இருவரும் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பெற்றோரின் தொடர்ந்து வரும் எதிர்ப்பால் மனமுடைந்த மாணவி, கடந்த 28-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உடனடியாக அவரை அறந்தாங்கி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், அந்த இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்குப் பிறகு, காதலியின் மரண செய்தியால் அதிர்ச்சியடைந்த மாணவன் பிரகாஷ், மனமுடைந்த நிலையில் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த இரட்டை தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.