தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்பு அவர்கள் மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் மனித கடத்தல் தொடர்பான வழக்கில் ரூபாய் 2 லட்சம் மோசடி நடந்துள்ளதாக கூறினர். எனவே உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கினால் உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டியுள்ளனர். பின்பு அவர்கள் மூதாட்டியிடம் உங்களை கைது செய்யாமல் இருப்பதற்கு ரூபாய் 50 லட்சம் தருமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மூதாட்டி பயந்து அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 50 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பின்பே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்களின் பண பரிமாற்றங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பள்ளிபரமேஸ்வரராவ்(40), சுகந்திபதிசந்திரசேகர்(40) மற்றும் சிவராம் பிரசாத்(43) ஆகிய 3 பேரும்‌ சேர்ந்து மூதாட்டியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் ஆந்திரா சென்று மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல வங்கி கணக்கு அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் கைது செய்த மூவரையும் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று சி.பி.ஏ, காவல்துறை மற்றும் கஷ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ் அப் மூலமாக ஏதேனும் அழைப்பு அல்லது ஆடியோ கால் வந்தால் அதனை பொதுமக்கள் நம்பாமல் உடனடியாக சைபர் குற்ற புகார் எண்ணுக்கு அழைக்குமாறு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.