தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் திருவிழா நடைபெற்று வந்தது. பருவமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மூன்று அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் அருவியில் குளிப்பதற்காக செல்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையே சேர்ந்த சிலர் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக ஒரு வேனில் 10 பேர் சென்றுள்ளனர். அப்போது அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு ஆட்டோ மீது மோதியது. இதனால் வேனில் பயணித்த 10 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயம் அடைந்த 10 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும் அவர்களில் சென்னை அம்பதூரை சேர்ந்த யாஸ்மின்(55) என்ற பெண்ணும், ஷேக் அலாவுதீன்(60) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
