திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குலத்தில் ஜூலை 29 அன்று, 23 வயதான ஃபஸீலா என்ற இளம்பெண் தனது கணவனின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ஃபஸீலா, மரணத்திற்கு முன் தனது தாயிடம் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் “நான் சாகப்போகிறேன், இல்லையெனில் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள்” என கூறியுள்ளார். இது தற்கொலை அல்ல, தூண்டப்பட்ட மரணம் எனக் கருதப்படும் வகையில் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
அவரது கணவர் நௌபால் மற்றும் மாமியார் ரம்லா இருவரும் ஃபஸீலாவை அடிக்கடி கடுமையான வன்முறைகள் செய்திருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் அனுப்பிய பதிவுகளிலும், நௌபால் அவர் வயிற்றில் ஓங்கி அடித்ததும், கை முறிந்ததும், தொடர்ந்து மாமியார் வாய் வழி துன்புறுத்தல்கள் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மலையாள போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் ஒப்படைத்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபஸீலாவுக்கு ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், ஜூலை 21-ஆம் தேதி, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அதுல்யா (29) அவரது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல, கொலை எனக் கூறி, கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கேட்டுள்ளனர்.
அதுல்யா 2014ஆம் ஆண்டு திருமணமானதிலிருந்து, தொடர்ந்து கணவரால் உடல் மற்றும் மனதளவில் தாக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அவரது காயங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. தற்போது மீண்டும் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
