செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில், வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரத்திலிருந்து விஷ குழவி (குழவி கொட்டுதல்) தாக்கியதால், இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் அர்த்தினேஷ், அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தார். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு மட்டை கீழே விழுந்துள்ளது. அந்த மட்டையில் இருந்த விஷ குழிவிகள் பறந்து வந்து, அர்த்தினேஷ் உட்பட 7 பேர் மீது கொட்டியுள்ளது.
இதனால் சம்பவ இடத்தில் அலறியடித்து ஓடிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், காயமடைந்த அனைவரையும் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 7 வயது சிறுவன் அர்த்தினேஷ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தார். மற்ற ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயர சம்பவம் செம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
