உத்தரப்பிரதேசம், ஜான்சி மாவட்டத்தில், தனியார் மைக்ரோ நிதி வங்கி ஓர் இளைஞரின் மனைவியை வலுக்கட்டாயமாக வங்கிக்குள் அழைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்திருந்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பம்ரௌலி கிராமம், ஆசாத் நகர் பகுதியில் வசிக்கும் ரவீந்திர வர்மாவின் மனைவி பூஜா வர்மா. கடந்த திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு வங்கி ஊழியர்கள் அவர்களை அழைத்து வந்து வங்கிக்குள் அமர வைத்தனர். கடன் தவணையை கட்டாததற்காக, “முதலில் பணம் கொடு – அப்புறம் மனைவியை அழைத்துச் செல்” என கூறி கணவரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மணிக்கணக்கில் ரவீந்திர வர்மா வங்கியில் கெஞ்சியும் ஊழியர்கள் எந்த தயவும் காட்டவில்லை. இதையடுத்து அவர் சோர்வடைந்து 112 எமர்ஜென்சி போலீஸ் எண்ணை அழைத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது, வங்கி ஊழியர்கள் திகைத்து போய், பூஜா வர்மாவை அவசரமாக வெளியே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் வங்கியாளர்கள் கடன் வசூலிக்கும் முறையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பூஜா வர்மா போலீசில் கொடுத்த புகாரில், ரூ.40,000 கடன் பெற்றுள்ளதாகவும், இதுவரை 11 தவணைகள் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிப் பதிவுகளில் 8 தவணைகள் மட்டுமே பதிவாகி இருப்பதாகவும், மீதமுள்ள மூன்று தவணைகளை வங்கி முகவர்கள் கௌஷல் மற்றும் தர்மேந்திரா மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மத்தியப் பிரதேசம் திகம்கர் பகுதியைச் சேர்ந்த வங்கி சிஓ சஞ்சய் யாதவ், திங்களன்று வீடு வந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் அனுஜ் குமார் கூறுகையில், அந்தப் பெண் 7 மாதங்களாக தவணையை செலுத்தவில்லை என்பதாலே அழைத்தோம் என்றும், அவர் தனது விருப்பத்தால் வங்கியில் இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் வசூல் பெயரில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் இத்தகைய செயல்கள், வங்கி நெறிமுறைகளையும், சட்டத்தையும் மீறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.