மேகாலயாவில் தேனிலவுக்காக சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட இந்தூரைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது.

“ஷில்லாங்கில் ஹனிமூன்” என்ற பெயரில் இது வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கப்போவது எஸ்.பி. நிம்பவத் என்பவர். “திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட துரோகங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம், சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நம்முடைய நோக்கம்” என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராஜாவின் சகோதரர் சச்சின் மற்றும் விபின் ஆகியோர், இந்த உண்மை சம்பவத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவதால் தான் திரைப்படமாக ஒப்புதல் அளித்ததாக கூறியுள்ளனர். “இப்படம் வெளிவரும்போது தான், எங்கள் சகோதரனுக்கு நடந்தது என்ன என்பதை அனைவரும் உணர முடியும்” என அவர்கள் தெரிவித்தனர். படத்தின் 80% ஷூட்டிங் இந்தூரில், மீதியுள்ள 20% மேகாலயாவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி மேகாலயா மாநிலத்தின் சோஹ்ரா பகுதியில் தேனிலவுக்காக சென்ற ராஜா ரகுவன்ஷி காணாமல் போனார். பின்பு ஜூன் 2-ஆம் தேதி, ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் அவளது காதலர் ராஜ் குஷ்வாஹா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.