மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகேயுள்ள சத்தியமூர்த்திநகர் 5-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த பரிமளா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிக்கு தற்போது 2 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், சமீப காலமாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ், மது வாங்குவதற்காக பரிமளா அணிந்திருந்த அரை பவுன் தங்கத்தாலியை கேட்டு வலியுறுத்தியுள்ளார். பரிமளா தாலியை தர மறுத்ததால், விக்னேஷ் மனைவியை தாக்கி விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. தனிமையில் மன வேதனை அடைந்த பரிமளா, வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது மீண்டும் வீடு திரும்பிய விக்னேஷ், மயங்கி கிடந்த மனைவியின் கழுத்திலிருந்த தங்கத்தாலியை பறித்து கொண்டு, அதனை பணமாக மாற்றி மது குடிக்க சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து அழ ஆரம்பித்ததால், அதன் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். அங்கு பரிமளா மயங்கி கிடப்பதை பார்த்து உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் பரிமளா தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை தொட்டிலில் அழவைத்துவிட்டு தாலிக்காக மனைவியை தாக்கிய விக்னேஷின் செயல் பொதுமக்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமயநல்லூர்  போலீசார் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.