ஜெர்மனியில் ஹெல்சிங் மற்றும் ARX Robotics என்ற இரு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், எதிர்கால போர்களை மனதில் கொண்டு, உளவு நோக்கத்துக்காக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கரப்பான் பூச்சிகளை உருவாக்கி வருகின்றன. இந்த கரப்பான் பூச்சிகள், சிறிய கேமரா மற்றும் சென்சார் தொழில்நுட்பம் மூலம் எதிரியின் தகவல்களை சேகரிக்கும் திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பு மற்றும் அதன் விளைவுகளால், ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவசர தேவையாக மாறியுள்ளது. ஜெர்மனியின் ஹெல்சிங் நிறுவனம், கடந்த மாதம் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில் தனது மதிப்பீட்டை 12 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த மதிப்பீட்டுடன் செயல்படும் பாதுகாப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஹெல்சிங்கை மாற்றியுள்ளது.

ஜெர்மனியின் Swarm Biotics நிறுவனம், ரோபோ கரப்பான் பூச்சிகளை நிஜமான பூச்சிகளைப் போலவே இயக்கக்கூடிய முறையில் உருவாக்கி வருகிறது. இதில் நரம்பு தூண்டல், சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் உள்ளடக்கம். இந்த கருவிகள், எதிரியின் முகாம்கள், நிலைகள், இயக்கங்கள் போன்ற முக்கிய தகவல்களை உளவுத்துறைக்கு வழங்கும். அவற்றை தனியாகவும் அல்லது குழுவாகவும் இயக்க முடியும். தன்னிச்சையாக செயல்படும் இவை, மனிதர்களால் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படலாம்.

ஜெர்மனியில் அரசு ஆதரவுடன் செயற்கை நுண்ணறிவு, ரோபோ டெக்னாலஜி, மினி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் திட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜெர்மனி போன்று இரண்டாம் உலகப்போரின் பின்னர் பாதுகாப்பு விஷயங்களில் மெதுவாக செயல்பட்ட நாடு, இப்போது பாதுகாப்பு செலவுகளில் அமெரிக்காவை முந்தும் அளவிற்கு முதலீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் எதிர்காலத்தில் ரோபோக்கள் மட்டும் போர்களில் பங்கேற்கும் அதிசயமான சூழ்நிலை உருவாகலாம். மனித உயிர்களைக் குறைக்கும் இந்த ரோபோ கரப்பான் பூச்சிகள், உலக ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கின்றன.