முன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த ஐந்து நாட்களாக கடுமையான மோதல்கள் நடந்தன. இதில் 38 பேர் உயிரிழந்தனர், பெரும்பாலோர் பொதுமக்கள். இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மலேசியா மற்றும் சீனாவின் முயற்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் புத்ராஜெயாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாட்டு தலைவர்களும் நேரடி தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்கவும், எதிர்கால அமைதி நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை உருவாக்கவும் ஒப்புக் கொண்டனர்.

டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ இணையத்தில் பதிவிட்ட செய்தியில், “நான் அமைதியின் ஜனாதிபதி என பெருமைப்படுகிறேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதுவரை 6 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் இரு தலைவர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேசி, சண்டை தொடரின் விளைவாக அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்யும் என்ற உச்சக்கட்ட எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். இதனையடுத்து, இரு நாடுகளும் சமரசத்திற்கு இணங்க, பேச்சுவார்த்தைகள் ஒரு நல்ல அடித்தளத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மோதலில் எல்லை பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்போடியாவின் பீரங்கித் தாக்குதலால் தாய்லாந்தின் சிசாகெட் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன. மக்கள் இடம்பெயர்ந்தனர். பயணிகள் நிலையங்களில் குடியிருப்பவர்கள் வறுமையிலும் பயமுமாக நாளை எதிர்நோக்கினர்.

கம்போடிய சிப்பாய் ஒருவர் கண்ணிவெடியில் கையை இழந்த சம்பவம், பின்னர் தூதர்களை இடமாற்றியளிக்கும் ரீதியான கடும் நடவடிக்கைகளாக மாறியது. ஆனால் தற்போது, அமெரிக்கா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் அமைதிக்கு ஒரு ஆரம்பநிலை உருவானது. மேலும் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக இரு நாடுகளும் உறுதி தெரிவித்துள்ளன.