ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான சவாரியா சேத் கோவிலில், ஒரு பக்தர் செய்த காணிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு, அந்த பக்தர் ஒருவர் வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் பூண்டு காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இந்த இரண்டு பொருட்களும் சேர்த்து சுமார் அரை கிலோ எடையை கொண்டவை என்றும், இது கோவிலில் வெள்ளி ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படும் முதல்முறையென கோவில் தலைவர் ஜானகி தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ராஜஸ்தானில் பூண்டின் விலை வெகுவாக உயர்ந்தது. இதனால் சில விவசாயிகள் அதிலிருந்து கணிசமான லாபம் ஈட்டியிருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த பக்தர் கிருஷ்ணருக்குத் துப்பாக்கி மற்றும் பூண்டை காணிக்கையாக வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், கடவுளுக்கு வெறும் பூக்களோ, பழங்களோ அல்லாமல், துப்பாக்கி போன்ற விசித்திரமான பொருட்களும் காணிக்கையாக வழங்கப்படும் விதம் பக்தியின் வித்தியாசமான வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் இதற்கு முன் பல வித்தியாசமான பரிசுகள் காணிக்கையாக வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில், வெள்ளியால் செய்யப்பட்ட பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்றவை பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளன. இங்கு, சவாரியா சேத் என அழைக்கப்படும் கிருஷ்ணர், செல்வத்தின் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
