2014ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, நேற்று  (ஜூலை 25, 2025) பிரதமராக 4,078 நாட்கள் பணி செய்து, முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வைத்திருந்த 4,077 நாட்கள் தொடர்ச்சியாக பதவி வகித்த சாதனையை முறியடித்து, இந்தியாவின் இரண்டாவது நீண்ட நாள் பதவியில் இருந்த பிரதமராக மோடி வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமராக இருந்தார். அவருக்குப் பிறகு மோடி இந்த சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 3 மக்களவை தேர்தல்களிலும் பா.ஜ.க.வை வெற்றிக்கு வழிநடத்தி, பிரதமராக பதவி வகித்து வரும் மோடியின் அரசியல் பயணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாது, நரேந்திர மோடி ஏற்கனவே பல்வேறு முக்கிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர் என்ற அடையாளத்தில் பிரதமராக பதவி வகித்த முதல் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்லாமல் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்.

இந்தி பேசாத மாநிலமான குஜராத்தில் இருந்து நீண்டகாலம் பதவியில் இருக்கும் முதலாவது தலைவர் என்ற பல பெருமைகளும் அவருக்கு இருக்கின்றன. மேலும், இரண்டு முறையும் முழு கால எல்லைகளில் முதல்வராகவும், பின்னர் இரண்டு முறையும் பெரும்பான்மையுடன் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனையும் அவரிடம் உள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசியலின் மிக நீண்ட நாள் பதவியில் இருந்த பிரதமர் என்ற சாதனையை தற்போது ஜவஹர்லால் நேரு தான் வைத்திருக்கிறார். அவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார். மோடி அந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால், 2029ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று மோடி புதிதாக படைத்துள்ள சாதனை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.