தமிழகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுத்துள்ள “மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்” இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு டிஜிபி தடை விதித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தனது அனுமதியின்றி கட்சிக்கொடி, நிர்வாகிகளை சந்திப்பு, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொள்வது சட்டவிரோதம் எனக் கூறி போலீசில் மனு அளித்திருந்தார்.

இதனையடுத்து, அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி, அன்புமணி ராமதாஸ் நடத்தும் நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், அன்புமணியின் இந்த நடை பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால், கட்சி நிறுவனரின் புகாரை அடுத்து அரசு இயந்திரம் அதற்கு அனுமதி மறுக்க, அன்புமணியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “அனுமதியின்றி செயல்பட முடியாது” என்ற ராமதாஸின் கடுமையான நிலைப்பாட்டால், பாமகவில் உள்ள உள் மோதல் மேலும் தீவிரமாகி இருப்பதற்கான சைகையாக இது பார்க்கப்படுகிறது.