நேபாளத்தை சேர்ந்த ரேணுகா கண்டேல்(16) சிர்ஜானா(13) என்ற இரண்டு சகோதரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த சிறுமிகளின் குடும்பத்தினர் இந்தியாவில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் கிளாஸ் செல்வதாக கூறி இரண்டு சிறுமிகளும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
அதன் பிறகு அவர்கள் தங்களது பெற்றோருக்கு பெங்களூரு செல்வதாகவும், வருவதற்கு சில காலங்களாகும். பணம் சம்பாதித்து விட்டு தான் வருவோம் என வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே காத்மாண்டோவில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்களது மகள்கள் வேலை பார்த்து வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சரியாக விவரம் தெரியவில்லை. இந்த சூழலில் பக்தாப்பூர் என்னும் இடத்தில் வாடகை வீட்டில் உடல் மற்றும் கழுத்தில் நைலான் கயிற்றால் சுற்றிய நிலையில் இரண்டு சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. வீட்டு உரிமையாளரிடம் தாங்கள் மாணவிகள், தங்குவதற்கு இடம் வேண்டும் என கேட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமிகளின் உடல்களை வாங்க இந்தியாவில் இருந்து பெற்றோர் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
