குஜராத்தில் பயங்கரவாத அமைப்புகளின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் இந்திய கிளையான AQIS அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் மாநிலத்திற்கு வெளியிலிருந்து பிடிபட்டுள்ளார். இவர்களின் அடையாளம் முகமது ஃபைக், முகமது ஃபர்தீன், செஃபுல்லா குரேஷி மற்றும் ஜீஷான் அலி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, அல்-கொய்தாவின் சித்தாந்தங்களை பரப்பி வந்ததாக தெரிகிறது. இவர்கள், இளைஞர்களை தீவிரவாத பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தில் ஜிஹாத் பற்றி பின்வட்டங்களுடன் தொடர்பு வைத்து வந்துள்ளனர். மேலும், வாள்கள், நாட்டிற்கு எதிரான பதாகைகள், மற்றும் ஆபத்தான ஆவணங்கள் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“>

இவர்கள் இந்திய ஜனநாயக முறையை கலைத்து, ஷரியா சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில், இவர்கள் பல சந்தேகத்திற்கிடமான செயலிகளை பயன்படுத்தி தங்கள் தொடர்புகளை மறைத்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தானாக அழிந்துவிடும் மெசேஜிங் செயலிகளை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த  நபர்கள் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய விசாரணைகள் மற்றும் நிதி ஆதாரங்களையும் கவனமாகப் பார்வையிட்டு வருவதாக குஜராத் ATS டிஐஜி சுனில் ஜோஷி தெரிவித்தார்.