மும்பையில் நடைபெறும் நெரிசலான லேடீஸ் லோக்கல் ரயில்களில் இடைஞ்சல் இல்லாத பயணத்தைப் பெறுவது சவாலாக உள்ளது. இந்த நிலைமையில், மத்திய தொடர்வண்டி வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை மாலை, ஓர் பெண் மராத்தி பேசவில்லை என்பதற்காக ஏற்படுத்திய வாக்குவாதம் பெரிய அளவிலான கலவரமாக மாறியுள்ளது. சம்பவம் நடந்த Ladies Coach-இல், 6 முதல் 7 பெண்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண், “மும்பையில் இருக்கணும் என்றால் மராத்தி பேசணும். இல்லேனா வெளிய போங்க” என கூறியதால்தான் மோதல் தீவிரமடைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF), அரசின் ரயில்வே காவல் துறையினரும் (GRP) விசாரணையைத் துவக்கியுள்ளனர். சமுதாயத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ, சிலரால் மொழி வன்முறை என விமர்சிக்கப்பட்டுள்ளதுடன், மராத்தி அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இது தனிப்பட்ட சம்பவமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, மராத்தி பேசாததை எதிர்த்துப் பல்வேறு சம்பவங்களில் தாக்குதல்களும் நடந்துள்ளன. விக்ரோளி பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளர், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மராத்தியரைக் குறை கூறியதாக சந்தேகித்து, மஹாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், பால்கர் மாவட்டத்தில் ஒரு வெளிமாநில ஆட்டோ டிரைவரும், மராத்தி பேசவில்லை என்பதற்காக பொதுமக்கள் முன்பே தாக்கப்பட்டார்.

சமீபத்தில், மொழி விவகாரத்தில் ஒரு உணவக உரிமையாளரை தாக்கிய MNS உறுப்பினர்களைத் தொடர்ந்து, கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீண்டும் சண்டையை தூண்டும் வகையில் பேசினார். “மராத்தியில் பேச மாட்டேன்னு யாராவது சண்டை போட்டா, அவரை அடிங்க… ஆனா வீடியோ எடுக்காதீங்க!” என்ற அவரது வார்த்தைகள், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன. இது MNS கட்சி கட்சியின் கொள்கையை வெளிப்படுத்துகிறது எனவும், வன்முறைக்கு தூண்டுதல் அளிக்கிறதெனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மராத்தி மொழி பேசாததால் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமூக ஒற்றுமைக்கே அபாயமாக உள்ளன. “மொழி அடையாளம் முக்கியமானது என்றாலும், அதன் பெயரில் வன்முறை செய்யக்கூடாது” என சமூக வலைதளங்களில் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.‌ மேலும் தற்போது அரசியல் கட்சிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து இந்த வகை மோதல்களை தவிர்க்க முக்கியமான அறிவுறுத்தல்களும் எதிர்பார்க்கப்படுகிறது.