ஈரானில் ஷிராஸ் நகரில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜூலை 19ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் பேருந்து ஒன்று ஷிராஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 55 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. அதனால் பேருந்தில் இருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் தகவல்கள் குறித்து அவரவர் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணங்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பார்ஸ் மாகாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.