உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நொய்டாவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி சர்மா மருத்துவ பட்டப் படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மகேந்திரன், ஷைரி என்கிற இருவர் ஜோதி சர்மாவுக்கு சில நாட்களாக மன ரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் விரத்தியடைந்த ஜோதி சர்மா பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவி தங்கி இருந்த அறையே சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது.‌

அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் மகேந்திரன், ஷைரி ஆகிய இருவரும் தனக்கு சில நாட்களாக மன ரீதியிலான தொல்லை அளித்து வந்ததால் என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தை மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கும் முன்பாக தன் கைப்பட எழுதியிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் பேராசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலையை கண்டித்து சக  மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.