உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான். முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் மனைவி மற்றும் மகளுக்காக ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஹசின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சூரி நகர் பகுதியில் ஹசின் ஜஹானுக்கு நிலம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தபோது அவருக்கும், பக்கத்து வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றிய நிலையில் ஹசின் அண்டை வீட்டாரை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பக்கத்து வீட்டார் ஹசின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் ஹசின் ஜஹான் மீது கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
