அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல், தற்போதைய நிதி சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்வதற்காக இந்த மாதத்தில் மட்டும் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது, 2025-ல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அதனைத் தொடர்ந்து இன்டெலும் இத்தகைய கடும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவுகள், நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளன.
இன்டெலின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவு, சந்தைப் போட்டியின் கடுமை, மேலும் தற்போதைய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப உலகில் இது ஒரு பெரிய அதிர்வலைகளை உருவாக்கி, மற்ற நிறுவனங்களின் வேலை வாய்ப்பு நிலைப்பாட்டை பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
