கோவையில் 16 வயது சிறுமி மீது 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில், அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை வடவள்ளி அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பூங்காவில் இடம்பெற்றது. அப்போது 16 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் பிறந்த நாள் கொண்டாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் (30), கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகியோர் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம், இளம்பிறை பெண்கள் பாதுகாப்பு சட்டம், பாலியல் குற்றங்கள், கொலை மிரட்டல், தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், கோவை போக்சோ சிறப்பு நீதிபதி நேற்று இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைத்து 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிராக சமூகத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை பல்வேறு குழந்தை பாதுகாப்பு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். “இனி எவரும் இளம்பெண்கள் மீது வன்கொடுமை செய்யும் முன் நன்றாக யோசிப்பார்கள்” என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
