அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரடியாக ரத்தின கம்பளம் போட்டு வரவேற்போம் எனக் கூறி அதிமுக பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார்.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக கட்சி ஆகிய இரண்டும் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி அழைப்பை நிராகரித்ததோடு தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு பிரம்மாண்ட கட்சி உள்ளதாக அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் கூட்டணி அழைப்பை நிராகரித்த பிறகு எடப்பாடி பழனிசாமி இந்த தகவலை சொன்னதால் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக யாரை சொல்கிறார் என்று பேசப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தனித்து தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி எனவும் அறிவித்துள்ளார்.

அதன்பிறகு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சி அதிகாரத்தில் இனி நாங்களும் பங்கேற்போம் என எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக அந்த கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில் தற்போது அதிமுக பாஜக கூட்டணியில் இணைய போகும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என கேள்வி எழுந்துள்ளது.